தினந்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக தேவை மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கொரோனா தொற்று பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசி தேவை என மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது.
தினந்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக தேவை மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
Published on

சென்னை,

அச்சுறுத்தி வரும் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்ட தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு இதுவரை 47 லட்சத்து 3 ஆயிரத்து 590 டோஸ் கோவிஷீல்டு, 7 லட்சத்து 82 ஆயிரத்து 130 கோவேக்சின் என மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கி உள்ளது.

இதில் தற்போது 9 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் கையிருப்பில் இருக்கும் தடுப்பூசி மருந்துகள் 5 முதல் 6 நாட்களுக்கு மட்டுமே போடும் நிலை ஏற்படும்.

இந்தநிலையில் தற்போது கூடுதலாக 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மத்திய சுகாதாரத்துறை கூடுதல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த11-ந்தேதி முதல் தடுப்பூசி திருவிழாவும், வேலையிடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 864 அரசு தடுப்பூசி மையங்களிலும், 931 தனியார் தடுப்பூசி போடும் மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை பொது சுகாதாரத்துறை இயக்குனர்களும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அதன் கிளை மருத்துவமனைகள், மினி கிளினிக்குகளை அரசு கொரோனா தடுப்பூசி மையங்களாக செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்கும் விதமாக அந்தந்த மருத்துவமனைகளுக்கு வெளிநோயாளியாக வருகிறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவும் அல்லது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அறிவுறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 12-ந்தேதி நிலவரப்படி 39 லட்சத்து 44 ஆயிரத்து 5 பயனாளிகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்துக்கு 47 லட்சத்து 3 ஆயிரத்து 590 டோஸ் கோவிஷீல்டு, 7 லட்சத்து 82 ஆயிரத்து 130 கோவேக்சின் என மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மண்டல தடுப்பூசி பாதுகாப்பு மையங்களுக்கும், மாவட்ட தடுப்பூசி பாதுகாப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மாநில தடுப்பூசி பாதுகாப்பு மையங்களில் எந்த மருந்தும் கையிருப்பு இல்லை. கடந்த 3 நாட்களில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சராசரியாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தடுப்பூசி திருவிழாவும், பணியிடங்களில் தடுப்பூசி போடும பணியும் நடைபெற்று வருகிறது.

எனவே எதிர்வரும் 10 நாட்களுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் இன்றி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடும் வகையில் 15 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 5 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்தும் என மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

மேலும் சென்னையில் உள்ள மத்திய மருந்து கிடங்கில் தேவையான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டு இருப்பதையும் உறுதி செய்யவேண்டும். இதன்மூலம் தமிழக அரசு கேட்கும்போது உடனடியாக மாநில தடுப்பூசி பாதுகாப்பு கிடங்குக்கு அனுப்ப முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேரே கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். பொது சுகாதாரத்துறை கணக்கெடுப்பின்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்கள் அனைத்தும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குனர்கள் வரும் 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com