

சென்னை,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில், தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றுள்ளது. இதேபோன்று, இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என 89 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 34,805 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதனால், இன்று வரை 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு உறுதியான 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலின நபர் ஒருவர் ஆவர். இதுவரை ஆண்கள் 48,346 பேர், பெண்கள் 29,968 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தில் 21 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.