கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம்: மருத்துவ கண்காணிப்பில் இருந்த 11 பேர் வீடு திரும்பினர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் காரணமாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த 11 பேர் வீடு திரும்பியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம்: மருத்துவ கண்காணிப்பில் இருந்த 11 பேர் வீடு திரும்பினர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Published on

சென்னை,

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்காமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மொத்தமாக 228 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து கேரள பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள், என்-95 முகக்கவசங்கள், 3 அடுக்கு முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 24 பேரின் ரத்தம், சளி உள்ளிட்டவைகளின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தால் தமிழகம் முழுவதும் 13 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 10 பேரும், ராமநாதபுரம் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த ஒருவரும் வீடு திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com