கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அரசு விரைவு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அரசு விரைவு பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அரசு விரைவு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்துகொண்டனர்.

இதில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். பயணிகள் அதிகம் பயணம் செய்யும் பஸ்களை நாள்தோறும் முறையாக பராமரித்து, சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில் போக்குவரத்துத்துறை அமைச்சர், பஸ்களை நல்ல முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாள்தோறும் 1,082 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பயணிக்கும் 70 ஆயிரம் பயணிகளின் நலனை பாதுகாத்திடும் வகையிலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் சுகாதாரத்துறையின் ஆலோசனையின் பேரில் அரசு விரைவு பஸ்கள் உள்ளே, வெளியே மற்றும் படுக்கை, இருக்கை, படுக்கை விரிப்புகள், தலைக்கவர், ஜன்னல் திரை ஆகியவை கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவலை தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com