எம்.ஆர்.ஐ. எந்திரம் வாங்க கோரப்பட்ட டெண்டரில் ஊழலா? தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் 3 ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ஐ.கருவிகளை கொள்முதல் செய்ய 'ரேட் காண்டிராக்ட்' ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றது.
எம்.ஆர்.ஐ. எந்திரம் வாங்க கோரப்பட்ட டெண்டரில் ஊழலா? தமிழக அரசு விளக்கம்
Published on

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் 29 எம்.ஆர்.ஐ. எந்திரங்கள் வாங்க விடப்பட்டுள்ள டெண்டரில், இந்தியாவில் ரூ.5 கோடியில் கிடைக்கும் எம்.ஆர்.ஐ. எந்திரத்தை ரூ.7 கோடிக்கு வாங்க டெண்டர் கோரப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ரேட் காண்டிராக்ட்

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:- இது முற்றிலும் தவறான தகவல். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் 3 ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ஐ.கருவிகளை கொள்முதல் செய்ய 'ரேட் காண்டிராக்ட்' ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றது. இதில் பிலிப்ஸ், சிமேன்ஸ் போன்ற பன் னாட்டு நிறுவனங்களுடன் செக்குயுயா என்ற இந்திய நிறுவனமும் பங்கேற்றது.

சான்று தேவை

ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின்படி சி.டி.எஸ்.கோ சான்றுடன் யு.எஸ்.எப்.டி.எ./சி.இ. என்ற சான்றுகளும் உள்ள கருவிகள் மட்டுமே தேர்வு செய்யப்படமுடியும். யு.எஸ்.எப்.டி.எ./சி.இ. சான்று தேவை என்ற நிபந்தனை, 2001-ம் ஆண்டிலிருந்து வாங்கப்பட்ட எல்லா எம்.ஆர்.ஐ. கருவிகளுக்கு தரம் மற்றும் மருத்துவப் பயனாளிகளின் பாதுகாப்பு அடிப்படையில் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது

.செக்குயுயா நிறுவனம்

செக்குயுயா நிறுவனம் முன்மொழிந்த கருவிகளுக்கு யு.எஸ்.எப்.டி.எ./சி.இ. சான்று மற்றும் சில தொழில்நுட்ப குறிப்புகள் இல்லை என்பதால் அவை வல்லுனர் குழுவால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து செக்குயுயா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில், அந்த வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com