நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழலை ஒழிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

தமிழக விவசாயிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை என்பதால் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியிருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். செய்யாத ஒன்றை செய்ததாகக் கூறி தமிழக விவசாயிகளை ஏமாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்வது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், 2021-ம் ஆண்டில் வழங்கியிருக்க வேண்டிய ரூ.2,500 விலையை நான்கரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் வழங்கியிருக்கிறார். உண்மையில் 2021-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் விலையை விட திமுக வாக்குறுதி அளித்த கொள்முதல் விலை 32.42 சதவீதம் அதிகம் ஆகும். அதே அளவீட்டைக் கொண்டு பார்த்தால் இப்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,311 வழங்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.811 குறைவாக கொடுத்து விட்டு நெல்லுக்கு அதிக விலை கொடுத்து விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழக அரசால் தற்போது குவிண்டால் ரூ.2,500க்கு கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2,369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 மட்டும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. அதிலும் கூட முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 மட்டுமே திமுக அரசு உயர்த்தி வழங்கியிருக்கிறது. இது என்ன சாதனையா? ஒடிசா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்குகின்றன. ஆனால், அதில் ஆறில் ஒரு பங்கைத் தான் திமுக அரசு வழங்குகிறது.
அதேநேரத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் 40 கிலோ மூட்டைக்கு ரூ.60 வீதம் கையூட்டு வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர். அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டும், ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல்லும் சேர்த்து ரூ.275 வீதம் கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. ரூ.131-ஐ கொடுத்து விட்டு, ரூ.275-ஐ பறித்துக் கொள்ளும் திமுக அரசுக்கு உழவர்கள் நலன் என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி இல்லை.
உழவர்களிடமிருந்து நெல்லையாவது முழுமையாக கொள்முதல் செய்கிறதா? என்றால் அதுவும் இல்லை. 2024 - 25ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி 120 லட்சம் டன் என்ற அளவை தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதில் 40 சதவீதம் அதாவது 48 லட்சம் டன் மட்டும் தான் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 72 லட்சம் டன் நெல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கப்பட்டு இருக்கிறது . இது தான் உழவர்கள் நலனை பாதுகாக்கும் லட்சனமா?.
தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 செலவாகிறது. அதனால், உழவர்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3500 வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 விழுக்காட்டை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் ஊழலை ஒழிக்க வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வ பணிகளை செய்வதை விடுத்து, குவிண்டாலுக்கு வெறும் 131 ஊக்கத்தொகை வழங்கிவிட்டு ரூ.131 கோடி வழங்கியதைப் போல மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






