திருவாரூரில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,520-க்கு ஏலம்

திருவாரூரில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,520-க்கு ஏலம் போனது.
திருவாரூரில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,520-க்கு ஏலம்
Published on

திருவாரூர்:-

திருவாரூரில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,520-க்கு ஏலம் போனது.

பருத்தி விற்பனை

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சு அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்துக்கு வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம்

அப்போது விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்ட வியாபாரிகள் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டி திறக்கப்பட்டு, வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 520-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 889-க்கும், சராசரியாக ரூ.10 ஆயிரத்து 373-க்கும் பருத்தி ஏலம் போனது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சத்து 62 ஆயிரத்து 345 மதிப்பில் பருத்தி விற்பனையானது. இந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com