

சென்னை,
ஜவுளி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஜவுளித் தொழிலுக்கு தேவையான பருத்திக்காக விவசாயத்தை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. எனவே பருத்தி சாகுபடி, உற்பத்தி, விலையில் ஏற்படும் மாற்றம் போன்றவை ஜவுளித் தொழிலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நூற்பாலைகள்
தமிழ்நாட்டில் 2 ஆயிரம் நூற்பாலைகள் உள்ளன. இதில், கோவை சுற்றுவட்டார பகுதிகளில் 1,000 நூற்பாலைகள் செயல்படுகின்றன. இங்கு தயார் செய்யும் நூல்களுக்கு தேவையான பருத்தி வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது பருத்தி விலை நிலையில்லாமல் உள்ளது.
கடந்த 10 நாட்களாக பருத்தி விலை உயர்ந்து வருகிறது. இது ஜவுளித் தொழிலை பாதித்து வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பருத்தி சாகுபடி பருவம் தொடங்கி 22 நாட்களே ஆகிறது. இந்த நிலையில், 2026-27 பருத்திச் சந்தையில் விலை அதிகரித்து வருவதால் நூற்பாலைகளில் உற்பத்தி செலவும் அதிகரித்து வருகிறது.
ரூ.4,500 உயர்வு
பருத்தி ஒரு கேண்டி விலை ரூ.4,500 வரை உயர்ந்துள்ளது. பருத்தி ஒரு கேண்டி என்பது 355.62 கிலோ ஆகும். அதாவது ரூ.64 ஆயிரத்தில் இருந்து ரூ.68,500-ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு அசாதாரணமான விலை உயர்வாக கருதப்படுகிறது. உற்பத்தியில் சரிவு, அதிக விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைத்திருப்பது, நவம்பர் 1-ந் தேதி முதல் இறக்குமதி வரி மீண்டும் விதிக்கப்பட உள்ளது போன்ற காரணங்கள் விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாக பருத்தி கூட்ட மைப்பு செயலாளர் நிஷாந்த் ஆஷர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சைமா செயலாளர் கூறியதாவது:- செப்டம்பர் 30 -ந் தேதி அன்று முடிவடைந்த 2025-26 பருவத் தில், உள்நாட்டுப் பருத்தி நுகர்வு 336 லட்சம் பேல்களாக இருந்தது. இதற்காக 67 லட்சம் பேல்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனாலும் இறுதி கையிருப்பு வெறும் 40 லட்சம் பேல்களாக மட்டுமே இருந்தது. 360 லட்சம் பேல்களுக்கான தேவைக்கு எதிராக, உற்பத்தி 260 லட்சம் பேல்களாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது விலையை வலுவாக வைத்திருக்க உதவும். இதனால் இந்த ஆண்டு பருத்தி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாது. மேலும், இறக்குமதி வரி மீண்டும் விதிக்கப்பட்டால், ஜவுளித்தொழில் துறையினரால் போட்டியை சமாளிக்க முடியாது. எனவே தொழில்துறைக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கும் ஒரு சமநிலையான அணுகுமுறை தேவை.
உரிய முடிவை எடுக்க வேண்டும்
பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து சலுகை இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது. உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறைந்துள்ளது. ஜவுளித்தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். உள்நாட்டு பருத்தி விவசாயிகள் பலரும், வேறு பயிர்களை பயிரிட தொடங்கி உள்ளனர். இதனால் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது. எனவே பருத்திக்கு நிரந்தரமாக இறக்குமதி வரி ரத்து சலுகையை அறிவிக்க வேண்டும்.
அப்போது தான் ஜவுளித்தொழில் மேலும் வளர்ச்சி பெறும். வெளிநாடுகளில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஜவுளி ஏற்றுமதிக்கான தேவைகள் இருக்கும் போது, பருத்தி விலையை கட்டுப் படுத்துவதிலும், இறக்குமதி வரியை ரத்து செய்வதிலும் மத்திய அரசு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.