நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

மனநல ஆலோசகர்கள் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்று நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை உதவி மையத்தின் மூலம் மனநல ஆலோசகர்களை கொண்டு இன்று கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இந்த கவுன்சிலிங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

நேற்று நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில், நீட் தேர்வு எழுதியவர்களுக்கு "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்" சார்பாக மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு, தேர்வு எழுதிய 17 ஆயிரத்து 567 மாணவர்களின் பட்டியல் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் அரசால் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 445 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், 110 மாணவர்கள் பி.டி.எஸ். மருத்துவப் படிப்பிற்கும் என மொத்தம் 555 மாணவர்கள் பயனடைந்தனர்.

எனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள தமிழக அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கிவருகிறது. மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து பெறுவதற்கு 104 என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டணமில்லா இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com