கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கமல்ஹாசன்

போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கள்ளச்சாராய விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடைய விழைகிறேன்.

தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com