சென்னையில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் சோதனை

திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கத்தை கத்தையாக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அறை ஒன்றில் தங்கியிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷபீக் ரகுமான் (37) என்பவரின் கட்டில் மெத்தைக்கு அடியில் கத்தை கத்தையாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் எண்ணிப் பார்த்ததில், மொத்தம் ரூ.11 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஷபீக் ரகுமான் கைது செய்யப்பட்டார்.

கள்ளநோட்டுகள் பறிமுதல்

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கள்ளநோட்டு கும்பலின் முக்கிய நபராக தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (40) செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.22.79 லட்சம் மதிப்பிலான உண்மையான 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 4 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளநோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன, இந்த கும்பலுக்கு பின்னால் வேறு யாரெல்லாம் உள்ளனர் என்பதையும், இவர்கள் பண இரட்டிப்பு மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com