சென்னையில் கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதானவர்கள் உளவாளிகளாக செயல்பட்டார்களா?

சென்னையில் கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் கள்ள நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் உளவாளிகளாக செயல்பட்டார்களா?
சென்னையில் கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதானவர்கள் உளவாளிகளாக செயல்பட்டார்களா?
Published on

சென்னை,

கடந்த குடியரசுதினம் சென்னை வாழ் மக்களுக்கு அதிர்ச்சிகரமான நாளாக அமைந்தது. குடியரசு தினத்தன்று சென்னையில் 25 தோட்டாக்களுடன் 6 கள்ளத்துப்பாக்கிகள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் பிரதீப், கமல் என்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் திருச்சியில் 2 கள்ளத்துப்பாக்கிகளுடன் சென்னை போலீஸ்காரர் பரமேஸ்வரன் மற்றும் அவரது உறவினர் நாகராஜ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் போலீஸ்காரர் பரமேஸ்வரனின் உறவுப்பெண்கள் குப்பு, நாகலட்சுமி ஆகியோர் ரூ.64 ஆயிரம் மதிப்புள்ள கள்ள மற்றும் செல்லாத நோட்டுகளுடன் சென்னையில் பிடிபட்டார்கள். இப்படி அடுக்கடுக்கான கைது நடவடிக்கைகள் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

கள்ளத்துப்பாக்கி, கள்ள நோட்டு வியாபாரத்தில் போலீஸ்காரரே ஈடுபட்டது போலீஸ் வட்டாரத்தையும் உலுக்கி உள்ளது. திருச்சியில் நடந்த போலீஸ்காரர் கைது நடவடிக்கையும், சென்னையில் நடத்தப்பட்ட கைது நடவடிக்கையும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது என்று அறிவிக்கப்பட்டாலும், இரண்டுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது.

யார், யாருக்கு சப்ளை?

போலீஸ்காரர் பரமேஸ்வரன் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் ஏற்கனவே 5 கள்ளத்துப்பாக்கிகளை ரவுடிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்துள்ளார். அந்த துப்பாக்கிகளை மீட்டு, அவற்றை வாங்கியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட பிரதீப், கமல் ஆகியோரும் ஏற்கனவே 5 துப்பாக்கிகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளனர். அதில் தொடர்புள்ள சதீஷ் என்பவர் உள்பட மேலும் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாகிஸ்தான் உளவாளிகள்

பிரதீப்பும், கமலும் தங்களது துப்பாக்கி கடத்தல் தொழிலுக்கு புழல் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் ரபீக் என்பவர்தான் மூளையாக உள்ளார் என்றும், அவர் சிறையில் இருந்து வகுத்து கொடுத்த திட்டத்தைதான் நாங்கள் நிறைவேற்றினோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ரபீக் சாதாரண கைதி அல்ல. கடந்த 2013-14-ம் ஆண்டில் கள்ள நோட்டு வழக்கிலும், பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பு வைத்த குற்றத்திற்காகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசாராலும், தேசிய புலனாய்வு அமைப்பினராலும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதே 2013-ம் ஆண்டில் கியூ பிரிவு போலீசார் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர்உசேன், சிவபாலன் உள்ளிட்ட 3 பேரை சென்னையில் கைது செய்தனர். இவர்கள் சென்னையில் அமெரிக்க தூதரகம், சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டி செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்

இவர்களுக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு உளவாளிகளாக அனுப்பி வைத்த இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஜாகீர் உசேனிடம் அப்போது கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. அந்த கள்ள நோட்டுகளை சப்ளை செய்தது, தற்போது புழல் சிறையில் இருக்கும் ரபீக்தான் என்று போலீசார் தற்போது தெரிவித்தனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ரபீக், தற்போது கள்ளத்துப்பாக்கி கடத்தல் மற்றும் கள்ள நோட்டு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அவரால் இயக்கப்பட்டு தற்போது கைதாகி உள்ள பிரதீப், கமல் ஆகியோருக்கும் பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது பற்றி தீவிர விசாரணை நடக்கிறது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த வழக்கில் மேலும் முக்கிய புள்ளிகள் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும், புழல் சிறையில் உள்ள ரபீக்கை கைது செய்து விசாரிக்கும் போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com