

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி(நாளை) எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட, பல்வேறு முக்கிய இடங்களில் நாளை சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையை பொறுத்தவரை சுமார் 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதனை முன்னிட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே காவல் துறை வாகன கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு என்பது அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கும் வகையில், எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினை போன்ற நிகழ்வுகள் நடந்தாலும் காவல்துறை தனது கடமையை செய்யும் என்பதையும், காவல்துறையின் படைபலத்தை காண்பிப்பதற்காகவும் இது போன்ற கொடி அணிவகுப்பு நடத்தப்படும்.
அந்த வகையில் சென்னையில் எழும்பூர் மற்றும் வடசென்னையில் உள எண்ணூர் விரைவுச்சாலை உள்ளிட்ட இரண்டு இடங்களில் இன்று காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.