'ஜிபே' மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதன மோசடி: காதல் தம்பதி கைது

மோசடி தம்பதியை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கோவை,
கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது54). இவர் சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15-ந் தேதி மதியம் 3 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை மூட தயாராகி கொண்டு இருந்தார். அப்போது அவருடைய கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர்.
அவர்கள் சக்திவேலிடம், தம்பதிகளான நாங்கள் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தோம். ஏ.டி.எம். கார்டு இருப்பதால் பணம் எடுத்து கொள்ளலாம் என நினைத்து அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்து விட்டோம். இங்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, எங்களது கார்டு வேலை செய்யவில்லை.
தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அவசரமாக ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. உங்களிடம் கையில் இருக்கும் பணத்தை கொடுத்தால், எங்களது செல்போனில் இருந்து ஜிபே மூலமாக பணம் அனுப்பி விடுகிறோம் என்று கூறி உள்ளனர். ஆஸ்பத்திரி, அவசரம் என கூறியதை நம்பிய சக்திவேல், அவர்களிடம் ரூ.2 ஆயிரம் கொடுத்தார். அதை வாங்கி கொண்ட அவர்கள், ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாக கூறி தங்களின் செல்போனில் இருந்த குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்தனர்.
அதை பார்த்த அவரும் பணம் வந்துவிட்டதாக கருதினார். அதன்பிறகு அவர்கள் இன்னும் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அதையும் ஜிபே மூலம் அனுப்பி விடுவதாக கூறினர். அதை நம்பி அவர் மீண்டும் ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். உடனே அவர்கள் ஜிபே மூலம் அனுப்பி விட்டதாக கூறி செல்போன் குறுஞ்செய்தியை காண்பித்து விட்டு சென்றனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு சக்திவேல் தனது வங்கிக்கணக்கிற்கு வந்த பணத்தை சரி பார்த்தார். அப்போது தான் தன்னிடம் பணம் வாங்கிய தம்பதி அனுப்பியதாக கூறிய பணம் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை என்பதும், அவர்கள் தன்னிடம் ரூ.4 ஆயிரத்தை மோசடி செய்து விட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தான் இதேபோல் மேலும் பலரிடம் அந்த தம்பதி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மோசடி தம்பதியை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மோசடி தம்பதி வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த தம்பதி, சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது ரிஸ்வான்(21), அவருடைய மனைவி சர்மிளா பானு (20) என்பதும், அவர்கள் 2 பேரும் காதலித்து 1½ மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. அந்த தம்பதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த தம்பதி மொத்தம் 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. கைதான தம்பதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.