

பொறையாறு.
தரங்கம்பாடி அருகே காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கினர். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் வீடு மற்றும் உறவினர்கள் வீடு சூறையாடப்பட்டது. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பார்த்திபன்(வயது 19). இவர், விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகில் உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினிக்கும் (17) காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
திவ்யதர்ஷினி பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரியில் சேருவற்காக காத்து இருந்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி இரு குடும்பத்தினர் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையில் திவ்யதர்ஷினியின் உறவினர்கள், பார்த்திபனை சாதி பெயரை கூறி தாக்கியதாக பொறையாறு போலீஸ் நிலையத்தில் பார்த்திபனின் உறவினர் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை தனது மகள் திவ்யதர்ஷினியை காணவில்லை எனக்கூறி அவரது தந்தை லட்சுமிகாந்தன், பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார், பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவரது வீட்டின் அருகே சாத்தங்குடி பாம்பாலம்மன் கோவில் எதிரே குமரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பார்த்திபன் இருப்பதாக அவருடைய செல்போன் சிக்னல் காட்டியது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு சிறிய கீற்றுக்கொட்டகையில் பார்த்திபன் மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பார்த்திபன்-திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பார்த்திபனை ஆணவக்கொலை செய்ததாக கூறி பார்த்திபனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள். திவ்யதர்ஷினியின் வீடு மற்றும் உறவினர்களின் வீட்டை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு இருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஸ்டாலின், சீர்காழி உதவி கலெக் டர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். இதுகுறித்து சாத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜா, பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவில்தான் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா?. அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நேற்று முன்தினம் பார்த்திபன் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் திவ்யதர்ஷினியின் தந்தை லட்சுமிகாந்தன், உறவினர்கள் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகிய 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி மரணத்தால் பொறையாறு அருகே உள்ள சாத்தங்குடி, புதுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஸ்டாலின் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பார்த்திபன் சாவு தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் மோகன்குமார். அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையில் திரளானோர் பொறையாறு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாத்தங்குடி-தரங்கம்பாடி சாலைக்கு வந்த பார்த்திபனின் உறவினர்கள் மற்றும் கட்சியினர் பெட்ரோல் பங்க் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பார்த்திபன் சாவு தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்தால்தான் உடலை பெறுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல திருக்கடையூரில் இந்திய வாலிபர் சங்கத்தினர் பார்த்திபன் சாவுக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.