மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாக்குதல்: காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதலர்கள் இருவரும் போன் மூலமாகவும் நேரில் பேசியும், பழகியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாக்குதல்: காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
Published on

தாரமங்கலம்,

மோட்டார் சைக்கிளில் வந்த போது உறவினர்கள் வழிமறித்து தாக்கியதால் இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

தாரமங்கலம் அருகே சூரப்பள்ளி கிராமம் நொரைச்சிவளவு பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவருடைய மகன் பூபதி (வயது 24), டிரைவர். இவரும் ஜலகண்டாபுரம் அருகில் உள்ள காப்பரத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (21) என்பவரும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் போன் மூலமாகவும் நேரில் பேசியும், பழகியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று சேலத்தில் உள்ள ஒரு துணி கடைக்கு இன்டர்வியூ செல்ல வேண்டும் என்று பூபதியை அழைத்துள்ளார் கிருத்திகா. இதனால் இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு சென்று நேர்முகத்தேர்வு முடித்துவிட்டு அங்கு ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்துள்ளனர்.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

மீண்டும் மாலையில் தாரமங்கலத்திற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கிருத்திகாவின் உறவினர்கள் பார்த்து விட்டனர். உடனே மோட்டார் சைக்கிளை அவர்கள் வழிமறித்து கிருத்திகாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த காதல் ஜோடி இருவரும் அவர்களிடமிருந்து தப்பித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு ஓடி வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றிய தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் கிருத்திகாவை அவரது பெற்றோர் அழைத்து செல்ல முற்பட்டபோது அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். இந்த நிலையில் காதலன் பூபதியுடன் தான் செல்வேன் என்று விடாப்பிடியாக கூறியதால் வேறு வழியின்றி போலீசார் கீர்த்திகாவை காதலனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com