தூத்துக்குடியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை


தூத்துக்குடியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை
x

ஏரல் பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்ற மூதாட்டிக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கொடுத்த மயக்க மருந்து கலந்த பழ ஜூஸை குடித்ததும் அந்த மூதாட்டி மயக்கம் அடைந்தார்.

தூத்துக்குடி

கடந்த 18.4.2015 அன்று ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு செபத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகளான வாசுதேவன் (வயது 70) மற்றும் அவரது மனைவி சங்கரி(58) ஆகிய 2 பேரும் அந்த மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர். பின்னர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட்டு வரலாம் என்று அவர்களது காரில் அந்த மூதாட்டியை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் கொடுத்த மயக்க மருந்து கலந்த பழ ஜூைஸ குடித்ததும், அந்த மூதாட்டி மயக்கம் அடைந்தார். பின்னர் அந்த தம்பதியினர் அந்த மூதாட்டியிடம் இருந்து தங்க செயின் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். மயக்கம் தெளிந்த பிறகு அந்த மூதாட்டிக்கு தனது தங்க செயின் உள்ளிட்டவை பறிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த மூதாட்டி அளித்த புகாரின்பேரில் ஏரல் காவல் நிலைய போலீசார் வாசுதேவன், சங்கரி ஆகிய 2 பேரையும் கடத்தல், மயக்க மருந்து கொடுத்தல் மற்றும் திருட்டு ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா நேற்று (5.6.2025), வாசுதேவன், சங்கரி ஆகிய 2 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்கால் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல்நிலை காவலர் அரவிந்த் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.

1 More update

Next Story