சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை பெற்ற ரகு கணேஷ் - தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க கோர்ட்டு அனுமதி

ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை பெற்ற ரகு கணேஷ் - தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க கோர்ட்டு அனுமதி
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், மரண தண்டனை கைதியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ரகு கணேஷின் தந்தை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com