

பிரபல ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் அதிபரான 84 வயது தொழிலதிபர் ஆர். வீரமணி, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பண ஆசை காட்டி வரவழைத்து கொடூர பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாகப் புகார் எழுந்தது. இதற்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் சிறுமிகளைச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொகுசு பங்களாவிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த பாலியல் கொடூரங்கள் அனைத்தும் ஒரு 16ஜிபி பென் டிரைவில் வீடியோ ஆதாரங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது காவல்துறைக்குக் கிடைத்தது
இந்த விவகாரம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் குறித்து, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரிலேயே அப்போதைய சென்னை கமிஷனர் ஏடிஜிபி அருண் மற்றும் சென்னை கூடுதல் ஆணையர் என். கண்ணன் ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், செல்வாக்கு மிக்க தொழிலதிபருக்குச் சாதகமாகச் செயல்பட்ட அதிகாரிகள், இந்த புகாரின் மீது எவ்வித வழக்குப்பதிவும் செய்யாமல் மாதக்கணக்கில் காலதாமதம் செய்து, வழக்கை அப்படியே கிடப்பில் போட்டு மூடி மறைக்க முயன்றதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஏடிஜிபி அருண் உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள்னர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, ஏடிஜிபி அருணிடமும் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், ஜெம் வீரமணியை, 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சென்னை போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 நாட்கள் விசாரணைக் காவல் கேட்கப்பட்ட நிலையில், 2 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது