மு.க.முத்துவை ஆஜர்படுத்தக்கோரி மகள் வழக்கு போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

மு.க.முத்துவை ஆஜர்படுத்தக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மு.க.முத்துவை ஆஜர்படுத்தக்கோரி மகள் வழக்கு போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. இவரது மகள் ஷீபா ராணி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

என் பெற்றோருக்கு நான் 1991-ம் ஆண்டு பிறந்தேன். நான், பெற்றோருடன் ராயப்பேட்டையில் குடியிருந்தேன் அப்போது, என் தந்தையின் முதல் மனைவியின் மகன் அறிவுநிதி, ரவுடிகளுடன் வந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினார். என்னையும், என் தாயாரையும் தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர், அந்த வீட்டை அவரது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.

1997-ம் ஆண்டு பாலவாக்கத்தில் என் தந்தை மு.க.முத்துவை, நானும், என் தாயாரும் சந்தித்தோம். அப்போதும் ரவுடிகளுடன் வந்த அறிவுநிதி, எங்களை அடித்து விரட்டினார். என் தந்தையை சந்திக்க அனுமதி வழங்க மறுக்கிறார். தற்போது நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். கடைசியாக 2015-ம் ஆண்டு திருவாரூரில் என் தந்தையை சந்தித்தோம். அப்போது அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அதன்பின்னர் அவரை சந்திக்க முடியவில்லை.

ஆஜர்படுத்த வேண்டும்

இப்போது, என் தந்தை எப்படி இருக்கிறார்? என்று தெரியவில்லை. அறிவுநிதியின் மிரட்டலுக்கு பயந்து, என் தந்தையை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். என் தந்தையை சட்டவிரோத காவலில் அறிவுநிதி வைத்துள்ளார். இதுகுறித்து கடந்த மாதம் 19-ந் தேதி போலீசில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, 75 வயதான என் தந்தை மு.க.முத்துவை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர், இதற்கு பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com