நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் சாதிய அடையாளங்கள் பயன்படுத்தக்கூடாது - கோர்ட்டு உத்தரவு

தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் சாதிய அடையாளங்கள் பயன்படுத்தக்கூடாது - கோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது;

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவில் வருடம் வருடம் சாதி ரீதியான கலர் வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வது, பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க என கோஷமிடுவது, ஒரு சிலர் ஒழிக கோஷம் போடுவது, மேலும் திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் தங்கள் சாதி ரீதியான டி-சர்டுகளை அணிந்து வந்து சாதி ரீதியான ரிப்பன்கள் அணிந்து வருவது போன்ற கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது.

எனவே ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் கலர் கலராக பட்டாசுகள் வெடிப்பதற்கும் சாதி ரீதியான படமோ பெயரோ கொடியோ காண்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் இணைந்து இந்த திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்களும் பயன்படுத்தக் கூடாது. தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com