திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு; மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை,
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச்செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள கோவில்களை பாதுகாக்கவும், மலையை சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய தொல்லியல் துறையிடம் இது தொடர்பாக மனு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






