காவல்துறையில் காலியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் காலியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 2019 வரையிலான காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி விட்டதாகவும், 2020 ஆம் ஆண்டை பொறுத்தவரை 11,181 பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது காவல்துறை ஆய்வு மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், காவல் ஆணையம் மற்றும் மாநில பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2021 ஆம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? 2020 ஆம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை முழுவதுமாக நிரப்பும் நடவடிக்கைகளை முடுக்கி விடுவது எப்போது? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் இது சம்பந்தமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக காவல் சீர்திருத்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com