

சென்னை,
விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என ஐகோர்ட் கடுமையான விதிகள் உத்தரவிட்டது.
விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையங்களுக்கு வரவழைக்கப்படும் நபர்களைக் போலீசார் எக்காரணம் கொண்டும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழக போலீசார் விசாரணைக்காகப் பொதுமக்களை அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து இந்த உத்தரவை வழங்கியுள்ளார். ஐகோர்ட்டின் முக்கிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:-
விசாரணைக்கு அழைக்கப்படும் சந்தேகத்திற்குரிய நபர்களையோ அல்லது சாட்சிகளையோ போலீசார் எவ்வித சித்திரவதைக்கும் ஆளாக்கக் கூடாது. ஒருவரை விசாரணைக்கு அழைக்க வேண்டுமானால், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (செக்சன் 179) விதிகளின் கீழ் எழுத்துப்பூர்வமான சம்மன் அனுப்பப்பட வேண்டும். அந்தச் சம்மனில் சம்பந்தப்பட்ட நபர் எந்தத் தேதியில், எந்தத் துல்லியமான நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
விசாரணைக்கு வரும் நபரிடம் நடத்தப்படும் விசாரணையின் நிமிடங்களை போலீஸ் நிலையத்தின் பொது நாட்குறிப்பில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். விசாரணை என்ற பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த விதிகளை மீறிச் செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐகோர்ட் எச்சரித்துள்ளது.