குற்றாலம் மெயின் அருவியில் 2 ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் 2 ஆவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் 2 ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சமூக இடைவெளியில் நின்று குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் வரிசையாக நின்று, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து சமூக இடைவெளியில் நின்று குளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே அங்கு குளித்து கொண்டிருந்தவர்களை போலீசார் வெளியேற்றி, அருவியில் குளிக்க தடை விதித்தனர். மேலும் மதியம் 1.45 மணிக்கு பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 ஆவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com