அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு உத்தரவில் தான் தெரியவரும் திருநாவுக்கரசர் பேட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு உத்தரவில் தான் தெரியவரும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு உத்தரவில் தான் தெரியவரும் திருநாவுக்கரசர் பேட்டி
Published on

திருச்சி,

அரசு நீடிக்குமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு இருக்கிறார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (இன்று) தி.மு.க.வினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவில் தான் தெரியவரும்.

பூரண மதுவிலக்கு

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்து உள்ளார். ஆனால் ஏற்கனவே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 500 மதுபான கடைகள் இன்னும் மூடப்படாமல் உள்ளது. அனைத்து மதுபான கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைந்தால் நல்லது.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வறட்சி நிவாரணமாக ரூ.40 ஆயிரம் கோடியும், வார்தா புயல் நிவாரணமாக ரூ.30 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசு அந்த நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com