

சென்னை,
சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவை தலைவர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் இன்று சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்கிற கிராமத்தில் 27.09.1905 அன்று பிறந்தார். வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1942-ஆம் ஆண்டு முதன்முதலாக ‘மதுரை முரசு’ என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பின்னர், ‘தமிழன்’ என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற கொள்கைப் பிடிப்பின் காரணமாக, இவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும் கூட, தன் கொள்கை மாறாமல் இருந்தார்.
1942-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் மதுரையில் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தொடர்ந்து, ‘மாலை மலர்’ என்ற மாலைப் பத்திரிகையையும் ‘ராணி’ என்ற வார இதழையும் தொடங்கினார். மக்கள் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டு தமிழ் இதழியல் துறையில் முத்திரை பதித்தார்.
1942-ஆம் ஆண்டு முதல் 1953-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957-ஆம் ஆண்டு முதல் 1962-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் சட்டமன்றப் பேரவை தலைவராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, 1969-இல் கூட்டுறவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாதப்பற்று கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் "தமிழர் தந்தை" என அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அரசின் சார்பில், அன்னாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.