

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
உத்திர பிரதேசத்தில் கங்கா விரைவு நெடுஞ்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி , உத்தரப்பிரதேசத்திற்கு அதிக நாடாளுமன்ற தொகுதிகள் கிடைப்பதை திமுக எதிர்ப்பதாகவும் , உத்தரப்பிரதேசத்தை இழிவுபடுத்தும் திமுகவுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு பேசியுள்ளார் .
பிரதமர் மோடி அரசியல் உள்நோக்கத்துடன் திமுக எதிர்ப்பு வெறுப்பை கக்கி இருக்கிறார்.
இத்தகைய பேச்சு இரண்டு மாநில மக்களிடையேயான நல்லுறவை பாதிக்கும் என்பதை உணராமல் , பொறுப்பற்ற முறையில் பிரதமர் பேசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பாஜக வின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இது மாநில மக்களிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் உருவாக்கும். மக்களிடையே நல்லிணக்கத்தை கெடுக்கும் .இது நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு எதிராக அமையும்.
மத்திய மோடி அரசு எதிர்க்கட்சிகளையும் அனைத்து கட்சி தலைவர்களையும் கலந்து பேசாமல் தொகுதி மறு வரை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி தாக்கல் செய்தது .
தமிழ்நாட்டையும், தென் மாநிலங்களையும் பாதிக்கும் வகையில், அம்மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில், மத்திய பாஜக அரசு அவசர கோலத்தில், தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தது.
மாநிலங்களிடையேயான சமநிலையை பாதிக்கும் வகையிலும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்ட அம்மசோதாவை திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தோற்கடித்தன.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, திமுக உத்தரபிரதேச மாநில மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இது உத்தரப்பிரதேச மாநில மக்களுக்கு, தமிழ்நாடு மாநில மக்கள் மீது வெறுப்பை ,கோபத்தை உருவாக்கும். மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும். மோதலை உருவாக்கும் .
அரசியல் ஆதயத்திற்காக, இது போன்று வெறுப்புணர்வை பரப்பும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பிரதமர் மோடியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.