

சென்னை,
இடைக்கால தடைக்குப் பதில் இடைக்கால அனுமதியா? நியாயமற்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சி.பி.ஐ. (எம்) வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. இது இடைக்கால தீர்ப்பு தான் என்று சுப்ரீம்கோர்ட்டே கூறிவிட்டு, இதுவரையிலும் தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்று சொல்வது நியாயமற்றதாகும்.
தமிழ்நாடு அரசு மற்றும் கோவில் நிர்வாகம் நில அளவைக் கல் தூணில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்த நிலையில், இடைக்காலமாக இந்த தீபம் ஏற்றலாம் என்கிற தீர்ப்பு நியாயமற்றதாகும். பொதுவாக, இடைக்கால தீர்ப்புகள், தீர்ப்பு வழங்கப்படும் வரை தற்கால நிலையே தொடரட்டும் என்று சொல்வதே வழக்கமாக இருந்திருக்கிறது.
அதேபோன்று, சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிற நிலையில் எவ்வித அவசியமும் அற்ற நிலையில் மத்திய அரசின் தொழிலக காவல் படையை பயன்படுத்தலாம் என்பது அப்பட்டமாக மாநில அரசின் உரிமையில் தலையிட்டு, மாநில அரசை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.
எனவே, மாநில அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பதட்டத்தை ஏற்படுத்த முனையும் மதவெறி சக்திகளை உறுதியுடன் எதிர்கொண்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை உறுதியோடு மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.