

தூத்துக்குடி,
மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த கோரியும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் 44 தொகுப்புச் சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்ற முயலும் மத்திய அரசைக் கண்டித்தும், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், சமையல் சிலிண்டர் மற்றும் பைக்குகளுக்கு மாலை அணிவித்து சி.பி.எம். கட்சியினர் தங்களது கண்டனத்தை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.
மாநகரக் குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் முத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகரக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இனிதா, ஆனந்த், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, கிளைச் செயலாளர்கள் வயணப்பெருமாள், மனோகரன், ஆறுமுகம், சசிகுமார் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.