விழுப்புரம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்

விழுப்புரம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்
Published on

விழுப்புரம்,

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் நேற்று காலை 6.30 மணியளவில் விழுப்புரம் அருகே சேர்ந்தனூருக்கும், கடலூர் மாவட்டம் திருத்துறையூருக்கும் இடையே சென்றபோது தண்டவாளத்தில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த என்ஜின் டிரைவர், உடனடியாக அப்பாதையில் சீரான வேகத்தில் ரெயிலை இயக்கினார். பின்னர் இதுபற்றி அவர், திருத்துறையூர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லியை சேர்ந்த மஞ்சு (வயது 22) என்பவர், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சென்னை ரெயில்நடுவழியில் நிறுத்தம்

தகவலின்பேரில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக வந்துகொண்டிருந்தது. உடனே ரெயில்வே அதிகாரிகள், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் அந்த ரெயில் காலை 7.10 மணிக்கு திருத்துறையூருக்கும், பண்ருட்டிக்கும் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

1 மணி நேரம் தாமதம்

இந்தநிலையில், விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாள பகுதியில் தற்காலிகமாக கிளாம்ப் மூலம் வெல்டிங் வைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.

அதன் பிறகு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8.10 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.

இதற்கிடையே தண்டவாள விரிசல் குறித்த தகவல் தெரிவித்த மஞ்சுவை ரெயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com