மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடி விரிசல் - ரெயில் போக்குவரத்து பாதிப்பு

மேல்மருவத்தூர் அருகே மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடி விரிசல் - ரெயில் போக்குவரத்து பாதிப்பு
Published on

திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் ரெயில் ஒன்று நேற்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் விவசாய பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்த மயில்கள் திடீரென பறந்து வந்தன.

அந்த சமயத்தில் இந்த ரெயில் வரவே மயில்கள் மீது ரெயில் மோதியது. இதில் ரெயின் என்ஜினின் இடது பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ரெயில் டிரைவர், ரெயிலின் வேகத்தை குறைத்து மெதுவாக நிறுத்தினார்.

பின்னர் கீழே இறங்கி பார்த்தபோது ஒரு மயில் மட்டும் இறந்தநிலையில் ரெயிலில் தொங்கி கொண்டிருந்தது. மற்ற மயில்கள் காயத்துடன் பறந்து விட்டன.

பெரும்பாலான ரெயில் என்ஜின் முகப்பு கண்ணாடியில் சேதாரம் ஆகாத படி இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் கலவரக்காலங்களில் யாரேனும் கற்கள் கொண்டு வீசினால் கண்ணாடி உடையாதபடி முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கம்பிகள் தாங்கிக்கொள்ளும். ஆனால் நேற்று வந்த ரெயிலில் வெறும் கண்ணாடி மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. தடுப்பு இரும்பு கம்பிகள் இல்லை.

இறந்துபோன பெண் மயிலை திண்டிவனம் வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் அதனை அடக்கம் செய்தனர். கடந்த சில மாதங்களில் இதுபோன்ற மயில் விபத்துகள் 2 முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com