கைவினைத் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் இளைய தலைமுறை கைவினைஞர்களுக்கு 6 மாத பயிற்சி

இந்த திட்டத்தின் கீழ் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவினைப் பொருட்கள்
AI Image
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 20 இளைய தலைமுறை கைவினைஞர்களுக்கு கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தும் வகையில் கைவினைத் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (Craft Entrepreneurship Development Programme – CEDP) மூலம் ஆறு மாத காலப் பயிற்சி அளிக்க 2026-2027ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 இளம் கைவினைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்க, ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் தொழில் திறமைகளை மேம்படுத்தி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக நிலையான சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) மூலம் கைவினைத் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (Craft Entrepreneurship Development Programme – CEDP) 2026–2027ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் 20 இளம் தலைமுறையினர்களுக்கு ஆறு மாத காலப் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியானது தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute – EDII) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இப்பயிற்சித் திட்டத்தின்மூலம் தொழில் முனைவோர் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் புதிய கைவினைப் பொருட்கள் உருவாக்கம், வணிக மேலாண்மை, நிதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மின்னணு சந்தைப்படுத்துதல் (Digital Marketing), வணிக முத்திரை உருவாக்கம் (Branding), பொருட்களைப் பொதியிடுதல் (Packaging), ஏற்றுமதி மேம்பாடு, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.

இதன் மூலம், இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் திறன்களை வணிக ரீதியாக வெற்றிகரமான கைவினைத் தொழில் நிறுவனங்களாக மாற்றுவதற்கும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைத் தொழில்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் வழிவகை செய்யப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி வாயிலாகப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 20 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆறு மாத காலப் பயிற்சியானது, பயிற்சி மையத்தில் நேரடிப் பயிற்சி மற்றும் இணையவழிப் பயிற்சி முறைகளில், ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் என்ற அடிப்படையில் வழங்கப்படும், உணவு மற்றும் தங்கும் இடவசதி இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் பரிசீலனை, தகுதிச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் தேவையான தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் பயிற்சியின் அனைத்து சுற்றுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு பயிற்சி தொடர்பான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுடைய இளைஞர்கள் விண்ணப்பப் படிவம், தகுதிகள் மற்றும் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூம்புகார் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.poompuhar.com என்ற முகவரியில் பார்வையிட்டு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் உள்ள இளம் பட்டதாரிகள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, கைவினைத் தொழில் முனைவோர்களாக உருவாக முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X