

கோத்தகிரி
கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர் கூறுகையில், இதுவரை 175 விவசாயிகள் கடன் அட்டையை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடன் அட்டை பெறாத விவசாயிகள் விண்ணப்பங்களை வருகிற 25-ந் தேதிக்குள் கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
பின்னர் அந்த அட்டை மூலம் கடன் பெறுவது எப்படி? என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் கோத்தகிரி வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.