

மறைந்த சமையல் கலைஞர் செப் தாமுவின் உடல் கண்ணம்மாப்பேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது
பிரபல சமையல் கலைஞர், செப் தாமு (72) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். தாமோதரன் எனும் இயற்பெயர் கொண்ட தாமு, சமையல் கலையில் கைதேர்ந்தவர். இந்தியா முழுக்க பல்வேறு ஸ்டார் ஓட்டல்களில் பணியாற்றி உள்ளார்.
2010-ல், ஒரு தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார். 2004-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், இவர் தமிழ்ப் படங்களில் சில தோற்றங்களில் நடித்துள்ளார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் தொடக்க காலம் முதல் நடுவராக பங்கேற்றவர் பிரபல சமையல் கலைஞர் தாமு.
இவரின் சாதனைய பாராட்டி லண்டன் உலகத் தமிழ் அமைப்பு, 2021ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியது. மேலும் அவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
செப் தாமுவின் உடல் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அமைச்சர் ராஜ்மோகன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சின்னத்திரையை சேர்ந்த குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடல் கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.