

தூத்துக்குடி,
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. அளித்த பேட்டி:
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி மறுக்கப்படுகிறது.
பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய குற்றங்களைத் தடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட கனிம வளம் தொடர்பான மசோதா, தமிழகத்தின் உரிமைகளையும் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிதும் பாதிக்கக்கூடியது.
எந்தவித நாடாளுமன்ற விவாதமும் இன்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்யாமல் மவுனம் சாதித்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை த,வெ.க. அரசு நீட்டித்துச் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.
தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது த.வெ.க.வின் வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும்; நிச்சயமாக அத்தகைய கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.