கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்து உள்ளன - சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம்

கண்காணிப்பு கேமராவால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்து உள்ளன - சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி (காரைக்குடி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கே.ஆர்.ராமசாமி:- திருபுவனம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் 2 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம். மொத்தம் உள்ள 18 இடங்களில் 11 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- உள்ளாட்சி தேர்தல் சரியான முறையில் நடந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. அங்கு தேர்தல் சரியான முறையில் நடத்தப்படும்.

கே.ஆர்.ராமசாமி:- அங்கு தேர்தலை நிறுத்த மாநில தேர்தல் ஆணையத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதே.?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உள்ளாட்சி தேர்தல் என்பது முழுக்க முழுக்க மாநில தேர்தல் ஆணையம் நடத்துவது. அரசு நடத்துவது அல்ல.

கே.ஆர்.ராமசாமி:- மத்திய அரசு தரவேண்டிய நிதியை ஏன் கேட்டுப்பெறவில்லை. அதற்காக போராட்டம் வேண்டுமானால் செய்வோம். நீங்களும் (அ.தி.மு.க.) வாருங்கள். மத்திய அரசுடன் நீங்கள் காட்டும் நெருக்கத்தால் வாங்காமல் இருப்பது தமிழகத்திற்கு செய்யும் துரோகம்.

ஓ.பன்னீர்செல்வம்:- மத்திய அரசிடம் நிதிக்காக பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. நானும், நிதித்துறை செயலாளரும் நேரில் சென்று கேட்டோம். தருவதாக சொல்லியுள்ளனர். உறுதியாக நிதி வந்து சேரும்.

கே.ஆர்.ராமசாமி:- அம்மா உணவகம் சரியாக நடைபெறவில்லை. நிதி பற்றாக்குறையால் முடங்கியுள்ளன. பல இடங்களில் மூடப்பட்டுள்ளது. எனக்கு சிறிய சந்தேகம் வருகிறது. அம்மாவை (ஜெயலலிதா) நீங்கள் மறந்துவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- அம்மாவை நாங்கள் மறக்கவில்லை. அம்மா உணவகம் எங்கும் நிறுத்தப்படவில்லை. அனைத்து உணவகத்தையும் ஆய்வு செய்தோம். நன்றாக நடக்கிறது. அதற்காக ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:- அம்மாவை மறந்துவிட்டதாக, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சொல்கிறார். அம்மாவின் பெயரில் இன்றைக்கு 5 முத்தான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அம்மாவை மறக்க மாட்டோம். உங்கள் தலைவரை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

கே.ஆர்.ராமசாமி:- நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் தான் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். அம்மாவை நாங்கள் மறந்துவிட்டதுபோல் சொல்கிறீர்கள். அதற்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

கே.ஆர்.ராமசாமி:- இப்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுகிறார்கள். இன்னும் அதிகமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சென்னை மாநகரில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு பெருநகரங்களிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் படிப்படியாக பொருத்தப்படும். இதனால், குற்றங்கள் குறைந்துள்ளன. விரைவாக குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படுகிறது.

கே.ஆர்.ராமசாமி:- டி.என். பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு, நீட் தேர்வு என இந்தத் தேர்வுகளில் என்ன நடந்தது.? இதற்கு நீங்கள் தான் பொறுப்பு. தவறு எப்படி நடக்கிறது.?

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- ஆசிரியர் தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. தவறான தகவலை கொடுக்கக்கூடாது.

அமைச்சர் ஜெயக்குமார்:- டி.என்.பி.எஸ்.சி. என்பது தன்னாட்சி அமைப்பு. நிதி மட்டும் தான் அரசு ஒதுக்குகிறது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com