போலி பத்திரிகையாளர் சங்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

மத்திய அரசின் பெயரை குறிப்பிட்டு போலி பத்திரிகையாளர் சங்க அடையாள அட்டை வைத்துள்ளவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போலி பத்திரிகையாளர் சங்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, மனுதாரர் உண்மை தன்மை அறிய அவரது அடையாள அட்டைகளை நீதிபதிகள் வாங்கி பார்த்தபோது, அந்த அட்டைகளுக்கு மத்தியில், சிலைக்கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், பத்திரிக்கையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி வருவதாக கருத்து தெரிவித்தனர்.

பின்னர் தமிழகத்தில் போலி பத்திரிகையாளர்கள் குறித்தும், அவர்கள் மீதான வழக்குகளின் விவரங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், புதிதாக ஒரு பத்திரிகையை தொடங்க வேண்டும் என்றால், இந்திய பத்திரிகை பதிவு துறையில் பதிவு செய்தாலே போதும். தமிழக அரசின் அனுமதி எதுவும் தேவையில்லை என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கில் இந்திய பத்திரிகை பதிவு துறையையும் (ஆர்.என்.ஐ.,) எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி இந்திய பத்திரிகை பதிவு துறைக்கு உத்தரவிட்டனர்.

அப்போது பத்திரிகையாளர் சார்பில் ஆஜரான வக்கீல் சூரியபிரகாசம், ஆல் இண்டியா ஆன்டி கரப்சன் பிரஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு என்று ஒரு சங்கம் உள்ளது. அந்த சங்கம் 100 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது என்று கூறினார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர், மத்திய அரசின் துறைகளில் இப்படி ஒரு சங்கம் உள்ளதா? என்று தேடிபார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், இந்த சங்கத்தின் பெயரை பார்த்தாலே போலி சங்கம் என்று தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்ற மோசடிகளை செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, இந்த சங்கத்தை தேடுவதைவிட, இந்த சங்கத்தின் பெயரில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அப்போது, மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் 226 பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கில் பிற எதிர்மனுதாரர்கள் தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com