“சரவெடி பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை” - தமிழக அரசு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி சரவெடி பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“சரவெடி பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை” - தமிழக அரசு
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், பட்டாசு வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், தனி நபரின் மகிழ்ச்சிக்காக முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம் பேரியம் நைட்ரேட் ரசாயணம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கும் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி, சரவெடி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாதாரண வகை பட்டாசுகளை வெடிக்க எந்த வித தடையும் இல்லை என்றும், பேரியம் நைட்ரேட் ரசாயணத்தால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், அதிக நேரம் வெடிக்கக் கூடிய சரவெடி பட்டாசுகள், அதிக சத்தம் எழுப்பக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகள் ஆகியவற்றை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com