திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவிலுக்கு பக்தர்கள் வருவது நிம்மதியை தேடித்தான் என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

சென்னையை சேர்ந்த சண்முகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தமிழகத்தின் மிகவும் பிரசித்திபெற்ற கோவில். இங்கு கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. கோவிலின் இணையதளத்திலேயே டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கடந்த மாதம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றபோது பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கான வழிகள் முறையாக இல்லை. கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள், சட்டவிரோதமாக சிறப்பு டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு பண மோசடி செய்து வருகின்றனர்.

இந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்ட பக்தர்கள் குறுக்கு வழியில் தரிசனத்திற்கு செல்கின்றனர். இதனால் முறையாக ஆன்லைனில் விண்ணப்பித்து டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. அங்கீகரிக்கப்படாத நபர்கள், புரோக்கர்கள் டிக்கெட் விற்பனை செய்து பணம் வசூலிப்பதை தடுக்கவும் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “கோவிலில் தனிநபர்கள் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக கோவிலை சுற்றி தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “கோவிலுக்கு பக்தர்கள் வருவது நிம்மதியை தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை ஏற்க இயலாது” என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும் “இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். அவர் கோவிலின் பாதுகாப்புக்கு தேவைப்படும் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும்.

சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அறநிலையத்துறையும், காவல்துறையும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story