

சென்னை,
ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து தற்போதுள்ள (2016-21) எம்.எல்.ஏ.க்களின் குற்ற பின்னணி, கல்வித் தகுதி, சொத்து விவரங்கள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொண்டன.
தற்போது 4 காலியிடங்கள் இருப்பதாலும், 26 எம்.எல்.ஏ.க்களின் பிரமாண பத்திரங்கள் கிடைக்காமல் போனதாலும், 204 எம்.எல்.ஏ.க்கள் (அ.தி.மு.க.வில் 109, தி.மு.க.வில் 86) பற்றிய விவரங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு முடிவின் விவரம் வருமாறு:-
68 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்கு
204 எம்.எல்.ஏ.க்களில் 68 எம்.எல்.ஏ.க்கள் (38 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 38 பேர் மீது கடுமையான குற்றப் பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. 8 பேர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 2 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 40 பேர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 23 பேர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
கடுமையான குற்றச்சாட்டு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 22 பேர் மீதும், அ.தி.மு.க.வில் 13 பேர் மீதும், காங்கிரசில் 2 பேர் மீதும், சுயேட்சை எம்.எல்.ஏ. மீதும் உள்ளன.
கோடீசுவர எம்.எல்.ஏ.க்கள்
204 எம்.எல்.ஏ.க்களில் 157 பேர் (77 சதவீதம்) கோடீசுவரர்கள். அ.தி.மு.க.வில் 76 பேரும், தி.மு.க.வில் 74 பேரும், காங்கிரசில் 5 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்., சுயேச்சையில் தலா ஒருவரும் கோடீசுவரர்களாக உள்ளனர். 2016-ம் ஆண்டு அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.05 கோடியாகும்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.49 கோடி. தி.மு.க.வினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.9.49 கோடி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.72 கோடி.
ரூ.170 கோடிக்கு மேல் சொத்து உள்ள எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ.க்களிலேயே அதிக மதிப்பில் சொத்துகளைக் கொண்ட 3 பேர், எம்.கே.மோகன் (அண்ணாநகர், தி.மு.க., ரூ.170 கோடிக்கு மேல்); டாக்டர் பூங்கோதை (ஆலங்குளம், தி.மு.க. ரூ.37 கோடிக்கு மேல்); ஆர்.காந்தி (ராணிப்பேட்டை, தி.மு.க. ரூ.36 கோடி) ஆகியோர் ஆவார்கள்.
குறைந்த மதிப்பில் சொத்துகளைக் கொண்ட 3 பேர், ஈஸ்வரன் (பவானிசாகர், அ.தி.மு.க. ரூ.4 லட்சம்), லோகநாதன் (கீழ்வைத்திணான்குப்பம், அ.தி.மு.க., ரூ.14 லட்சம்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம், தி.மு.க., ரூ.16 லட்சம்) ஆகியோர் ஆவார்கள்.
34 எம்.எல்.ஏ.க்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தனர். 27 பேர் வருமான வரி விவரங்களை அறிவிக்கவில்லை.
படிப்பு
89 எம்.எல்.ஏ.க்கள் 5 முதல் 12-ம் வகுப்புவரை படித்தவர்கள். 110 எம்.எல்.ஏ.க்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 பேர் டிப்ளமோ படித்துள்ளனர். எழுதப்படிக்க மட்டுமே தெரிந்தவர் ஒருவர். (கல்வித் தகுதியை ஒருவர் குறிப்பிடவில்லை).
25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் 78 பேரும், 51 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் 125 பேரும் உள்ளனர். ஒருவருக்கு வயது 77.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.