சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்தில் குற்றவியல் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் குற்றவியல் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிலளித்துள்ளார். பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்தில் குற்றவியல் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
Published on

சென்னை,

சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை-மகன் இருவரது உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகளை, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை அரசின் செயல்களுக்கு பாராட்டுகளும், மறைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்தினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்திருக்கிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டு விரிவான, விரைவான விசாரணையை தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. பிரிவு மேற்கொண்டு வருகிறது.

இதனை சாத்தான்குளம் பகுதிவாழ் மக்களும் மனதார வரவேற்று பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் இவையாவிற்கும் நேர் எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக காவல்துறையின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் தொடர்ந்து கூறிவருகிறார்.

எந்த ஒரு குற்ற சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது. முதற்கட்ட விசாரணை, சாட்சிகளை சேகரித்தல், சூழல் சார்ந்த ஆதாரங்களை திரட்டுவது, பிரேதபரிசோதனை அறிக்கையை பெறுவது போன்றவற்றின் அடிப்படையில்தான் ஒரு குற்றத்தின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, வழக்கின் போக்கும், குற்றவாளிகளும் உறுதி செய்யப்படுகிறார்கள்.

அதிலும், குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின்போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே அது கொலையா?, தற்கொலையா?, இயற்கை மரணமா? என்பது உறுதி செய்யப்படும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் கனிவுள்ளம் கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க ஆணையிட்டதோடு, கல்வித் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனையை, உட்சபட்ச தண்டனையை பெற்றுத்தருவோம் என்பதையும் தெளிவுபடுத்தியதோடு, நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விரைந்து நடத்தப்படும் வழக்காக இவ்வழக்கு கையாளப்படும் நிலையில், வழக்கு விசாரணைக்கு எவ்வித இடையூறோ, குந்தகமோ ஏற்பட்டுவிடாத அளவில் மதுரை ஐகோர்ட்டின் கருத்தறிந்து, இவ்வழக்கை மத்திய புலனாய்வு பிரிவான சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என்பதையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதில், எங்கே தமிழக அரசு தவறிழைத்தது? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதல்-அமைச்சர் முரண்பாடாக பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது?. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை தெளிவுப்படுத்த வேண்டும்.

இனியும் தி.மு.க., மரணங் களை முன்வைத்து, தந்திர அரசியலையும், தரங்கெட்ட போக்கையும் தொடருமேயானால், அக்கட்சி விரைவில் மக் களால் மயானத்திற்கு அனுப்பப்படும் என்பது நிச்சயம்.

அ.தி.மு.க ஆன்மீக நெறிகொண்டு நடைபோடுகின்ற அன்பியல் இயக்கம். நேர்மை, அறம், நியாயத்தின்பால் நடக்கின்ற புனித இயக்கம். இதன் புனிதத்தை தி.மு.க. போன்ற பாவமூட்டை கட்சிகளால் ஒருபோதும் பாழ்படுத்த முடியாது. எதுவரினும் எதிர்கொண்டு, எந்நிலையிலும் புண்ணியத்தின் வழியில் இருந்து பிறழாது, சட்டத்தின் வழியில் தர்மத்தின் பாதையில் செங்கோல் செலுத்துகிற எங்கள்

எளிமையான சாமானிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சினை நரி சூழ்ச்சிகளால் ஒருபோதும் களங்கப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com