"குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

குடிநீரில் கழிவுநீரை கலந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. இந்த சம்பவத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
"குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
Published on

குடிநீரில் கழிவுநீரை கலந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. இந்த சம்பவத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கு இரட்டை தம்ளர் முறையும் வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் நடந்து வருகின்றன.

எனவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வேங்கைவயல் கிராமத்தில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் எடுத்த நடவடிக்கை என்ன? என அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, இரட்டை தம்ளர் விவகாரம், கோவிலுக்குள் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவுநீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 பேர் கைதாகியுள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவுநீர் கலந்தது தொடர்பாக அடையாளம் தெரியாதவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. இது மிக முக்கிய பிரச்சினை. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மனித உரிமை மற்றும் சமூக நீதிப்பிரிவு துணை கமிஷனர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com