இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான விமர்சனங்கள்; செல்வப்பெருந்தகை கண்டனம்

கலைஞர்களை இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான விமர்சனங்கள்; செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உலகளவில் இந்திய இசைக்கு பெருமை சேர்த்தவர், ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். அவருக்கு எதிராக சமீப காலமாக முன்வைக்கப்படும் தேவையற்ற, அடிப்படை அற்ற விமர்சனங்கள் மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கின்றது.

பல தசாப்தங்களாக இசையின் மூலம் மனிதநேயம், அமைதி, ஒற்றுமை ஆகிய மதிப்புகளை உலகம் முழுவதும் பரப்பி வரும் ஏ.ஆர். ரகுமானின் பங்களிப்பு அளவிட முடியாதது. கலைஞர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்;. மேலும், அவர் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அவர் பதிலளித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்துத் தாக்குதல் நடத்துவதும், அவமதிக்கும் வகையிலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்கும், கலாசார மரபுகளுக்கும் முற்றிலும் முரணானவை.

கலைஞர்களை அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அவர்களின் சாதனைகளையும், சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளையும் புறக்கணித்து, இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை.

எனவே, இசை மேதை ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக முன்வைக்கப்படும் இத்தகைய கடுமையான விமர்சனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். கலை, கலாச்சாரம், மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் அனைவரும் இத்தகைய செயல்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com