காவல்துறை மீது பழி சுமத்துவது முற்றிலும் தவறானது - சபாநாயகர் அப்பாவு


காவல்துறை மீது பழி சுமத்துவது முற்றிலும் தவறானது - சபாநாயகர் அப்பாவு
x

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதலில் கேட்ட 2 இடங்களும் மிகவும் குறுகலானவை என்பதால், காவல்துறை அங்கு அனுமதி மறுத்து என்று அப்பாவு கூறினார்.

நெல்லை,

சபாநாயகர் அப்பாவு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:“கரூரில் நடந்த துயரச்சம்பவம் மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.இந்த துயரச்சம்பவத்தை வைத்து நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால் காவல்துறை மீது பழி சுமத்துவது முற்றிலும் தவறானது. இதுகுறித்து பொறுப்பு டி.ஜி.பி. தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதலில் கேட்ட 2 இடங்களும் மிகவும் குறுகலானவை என்பதால், காவல்துறை அங்கு அனுமதி மறுத்து, தற்போது விபத்து நடந்த இடத்தில்தான் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, காவல்துறை தங்களது கடமையை சரியாகவே செய்துள்ளது. அவர்கள் மீது குற்றம் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.விழாவுக்கான நேரம் காலை 8.45 மணி மற்றும் 12 மணி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, முதல் நிகழ்ச்சிக்கு மதியம் 2 மணிக்கும், இரண்டாவது நிகழ்ச்சிக்கு இரவு 7.50 மணிக்கும் தான் வந்திருக்கிறார்.

பொதுவாக அரசியல் தலைவர்கள் கூட்டம் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக காலதாமதமாக வருவது வழக்கம். காலை நிகழ்ச்சிக்கு வந்த மக்கள், தலைவர் வராததால் மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஆட்களை திரட்டுவதற்காக ஒவ்வொருவருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் கூட்டம் சேரும் வரை காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பசி, சோர்வு மற்றும் நீண்ட நேரக் காத்திருப்புக்கு பிறகு தலைவர் வந்ததும் ஏற்பட்ட ஆர்வ மிகுதியே இந்த துயரத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது இயற்கையாக நடந்ததா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பது விசாரணை ஆணையத்தின் மூலம்தான் தெரியவரும். இருப்பினும், இவ்வளவு பெரிய காலதாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story