

கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பூதகேணி கிராமம் அங்காளம்மன் கோவில் தெருவில் நேற்று காலை திடீரென 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் அருகில் சென்று பார்த்தபோது, அதன் தலை, வாயில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர்கள் அந்த முதலைக்கு தண்ணீர் கொடுத்தனர்.
மேலும் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வன அலுவலர் சத்தியவேல் தலைமையிலான வனப்பிரிவு காவலர்கள் விரைந்து வந்து காயமடைந்த முதலையை பிடித்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த முதலை பழைய கொள்ளிடம் ஆற்றின் கிளை வாய்க்காலில் இருந்து கிராமத்திற்குள் புகுந்திருக்கலாம் என்றும், முதலைக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர், சுமார் இரண்டரை வயதுடைய அந்த முதலையை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு வக்காரமாரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக விட்டனர்.