நாகையில் பெய்த தொடர்மழையால் பயிர்கள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

கோப்புப்படம்
விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. அரசின் மூலம் எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
நாகையில் பெய்த தொடர்மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கிழ்வேளூர் ஆகிய பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த எள், உளுந்து உள்ளிட்ட தானிய சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வரலாறு காணாத வறட்சி, பருவம் தவறி பெய்யும் தொடர்மழை என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான இயற்கை பேரிடர்களை சந்திக்கும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. அரசின் மூலம் எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் கூட இழப்பீடு வழங்கி உதவ முன்வராத தி.மு.க. அரசு, ஆண்டுதோறும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாலும், அதற்கென பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதால் என்ன பயன்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
எனவே, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய முறையில் கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






