ராமேசுவரம் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

விடுமுறை நாளையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Published on

ராமேசுவரம்,

விடுமுறை நாளையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேசுவரம் கோவில்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாட்களை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் நீராடினர். அதன்பின்னர் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு கட்டண தரிசன பாதையில் கிழக்கு வாசல் வரையிலும் பக்தர்கள் நின்றிருந்தனர்.

பெண் பக்தர் மயங்கி விழுந்தார்

பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருந்ததால் தடுப்பு கம்பிகள் வழியாக சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனே உடன் வந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதுபோல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ராமேசுவரம் கோவிலின் மேற்கு ரத வீதி சாலையில் இருந்து திட்டக்குடி சாலை ராமதீர்த்தம், லட்சுமண தீர்த்தம் வரையிலும் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடியே சென்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com