சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு செல்ல 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
Published on

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு செல்ல 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தொடர் விடுமுறை

இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற 4-ந் தேதியும், சரஸ்வதி பூஜை 5-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் வருகிற 3-ந்தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிற்றுக்கிழமை சேர்த்து அவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை ஆகும்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை அவரவர் செந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். இதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சேலம், ஆத்தூர் உள்ளிட்ட அவரவர் சொந்த ஊர்களுக்கு வரத்தொடங்கி உள்ளனர். மேலும் சேலத்தில் வேலை பார்க்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று மாலை புறப்பட்டனர். இதனால் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு பஸ்கள்

வெளியூர்களில் இருந்து சேலம் வரும் பயணிகளின் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறியதாவது:-

தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வேலை பார்க்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு வர வசதியாக சென்னையில் இருந்து சேலத்திற்கு, சேலம் கோட்டத்திற்குட்பட்ட 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே போன்று கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து 60 முதல் 70 பஸ்கள் என மொத்தம் வழக்கத்தை விட 250 சிறப்பு பஸ்கள் 2-ந் தேதி வரை கூடுதலாக இயக்கப்படுகின்றன.

ஜங்சன் ரெயில் நிலையம்

விடுமுறை முடிந்து அவரவர் வேலை பார்க்கும் இடங்களுக்கு செல்ல வசதியாக வருகிற 4, 5, 6-ந் தேதிகளில் இதே போன்று சேலத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் விடுமுறையையொட்டி நேற்று இரவு ஜங்சன் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com