கோடை விடுமுறை முடிந்தாலும் குறையாத கூட்டம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்
Published on

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் மக்கள் குடும்பத்துடன் மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்தனர்.

நீண்ட வரிசையில்

தற்போது கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ணநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகாலை முதலே வத்தலக்குண்டு-கொடைக்கானல் மற்றும் பழனி-கொடைக்கானல் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பயணிகள் காத்திருந்தனர்.

அலைமோதிய கூட்டம்

மோயர் பாயிண்ட், குணா குகை, தூண்பாறை, பைன் காடு, பசுமைப் பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா மற்றும் பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மையங்களில் கூட்டம் அலைமோதியது. இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் மற்றும் செல்பிகள் எடுத்து மகிழ்ந்தனர்.நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ததுடன், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரியிலும் ஈடுபட்டனர். இதமான காலநிலையால் மேல்மலை கிராமங்களான மன்னவனூர் மற்றும் பூண்டி பகுதிகளுக்கும் சென்று பசுமை நிறைந்த புல்வெளிகளை கண்டு ரசித்தனர். மேலும் முயல் மற்றும் ஆடு ஆராய்ச்சி நிலையங்களையும் பார்வையிட்டனர்.சுற்றுலா பயணிகள் மலைப்பகுதிகளில் விளையும் காய்கறிகளையும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏரிச்சாலை, செவன் ரோடு, கலையரங்கம், மூஞ்சிக்கல் உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோர ஆக்கிரமிப்புகளும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com